வெளியேறிய அதிமுக, எதிர்த்த பாஜக; பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நிறைவேறியது ஆளுநருக்கு எதிரான தீர்மானம்!

ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனபதற்காக சட்டப்பேரவை விதி 92 (vii) மற்றும் 287 ல் சில பதங்களை நிறுத்தி வைப்பதற்கான அரசினர் தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை வழங்க ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத்தலைவரை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றினார்.

முன்னதாக ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சிக்கும் தீர்மானம் என்பதால் சட்டமன்ற விதிகளில் சில பதங்களை நிறுத்தி வைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார்.

அப்போது சட்டபேரவை விதி 92 (vii) ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநரைப் பற்றி பேசக்கூடாது என்பதையும், விவாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆளுநர் பெயரை பயன்படுத்துதல் கூடாது என்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என முன்மொழிந்தார்.

மேலும் சட்டப்பேரவை விதி எண் 287ல் அடங்கியுள்ள, பேரவையின் முன் உள்ள தீர்மானத்தை பொறுத்தவரை எந்த விதியையாவது நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் ஒன்றை முன்மொழிய வேண்டும் எனவும், கூட்டத்திற்கு வந்து வாக்களிக்கும் மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பகுதியினரின் ஆதரவுடன் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவ்விதியை நிறுத்தி வைக்கலாம் என்ற தீர்மானத்தையும் துரைமுருகன் முன்மொழிந்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு, அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரவையின் கதவுகள் மூடப்பட்டு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்த நிலையில், அவையில் இருந்த 146 உறுப்பினர்களில் 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இன்று அவைக்கு 2 பாஜக உறுப்பினர்கள் மட்டும் வந்திருந்த நிலையில் அவர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் இன்றைய தினம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மூவர் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.

தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே அதிமுகவினர் வெளிநடப்பு செய்த காரணத்தினால், அவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து எண்ணிக் கணிக்கும் முறைப்படி அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானத்தை சபாநாயகர் நிறைவேற்றித் தந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.