அதிமுகவின் எதிர்கால நலன்கருதி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் பதவி விலகவேண்டும் : போஸ்டரால் பரபரப்பு ..!
அதிமுக கட்சியில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்காக நேற்று எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது. இதே போன்று ஒ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிலும் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே நாளை தேனி அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அதிமுக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புதிய பேருந்து நிலையம், பெங்களூரு சாலை, சேலம் சாலை, காவேரிப்பட்டணம் பனகல் தெரு, தருமபுரி சாலை, கொசமேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிமுக-வின் தலைமை நிர்வாகிகள் ஓபிஎஸ், இபிஎஸ் பதவி விலக வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும், இந்த சுவரொட்டிகளை பி.சி.வெற்றிவேல் என்பவர் குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் ஒட்டியதாக தகவல் வெளியாகியுள்ளன.
