வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக யாரை நம்பியும் இல்லை என்றும், அதிமுக தான் பல கட்சிகளுக்கு உதவியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெறப்போகும் வெற்றி, வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிவித்த அவர், பாஜகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு 2024ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் எனத் தெரிவித்தார்.
தற்போது வரை அதிமுக – பாஜக கூட்டணி நீடிப்பதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதையும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். ஆனால் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் ஒரு சில நாட்களில் காணாமல் போகும் எனத் தெரிவித்தார்.