கடந்த மாதம் ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை அமர்வானது இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது மனுதாரரான இபிஎஸ் தரப்பின் வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்தார்.
அதே போல் மதியம் 2.25 மணியளவில் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுகவில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் ஆனது செல்லாது என கூறினார். குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி பெற்றால் மட்டுமே பொதுக்குழு கூட்டம் நடத்த முடியும் என தனது வாதங்களை முன்வைத்தார்.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தரம் ஆகியோர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். அதே போல் நாளைய தினத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்புக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இபிஎஸ் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பானது வருகின்ற திங்கள், செவ்வாய்கிழமையில் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.