ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு; யார் இந்த கே.எஸ்.தென்னரசு?

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக நடந்து முடிந்த சட்டசபை கூட்ட தொடரில் சட்டசபை செயலாளரால் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைதேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவபிரசாந்த் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் என்பவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். யார் இந்த தென்னரசு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…

1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளராகவும், 1995-ம் ஆண்டு நகர செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், 2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 2010-ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் என படிப்படியாக உயர்ந்துள்ளார்.

2011-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். 2001 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஈரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.

ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வரும் தென்னரசு, 25 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். பெரியார் மாவட்ட தொழில் வர்த்தகசபை துணைத்தலைவராக 22 ஆண்டுகள், ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டிங் அசோசியேசன் தலைவராக 20 ஆண்டுகள், செயலாளராக 3 ஆண்டுகள், தமிழ்நாடு பிரிண்டிங் -பிராசசிங் சம்மேளன மாநில தலைவராக 16 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார்.

தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர் அசோசியேசன் மாவட்ட துணைத்தலைவராகவும், ஈரோடு மாவட்ட பாரத் பெட்ரோலியம் டீலர் அசோசியேசன் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்த இவர் மனைவி டி.பத்மினி, மகன் டி.கலையரசன், மருமகள் வி.சுகாசினி, மகள் டி.கலைவாணி, மருமகன் எஸ்.பரணிதரன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.