மக்களே கவனம் !! மே-4ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்… வானிலை மையம் தகவல்….
தமிழகத்தில் கோடைவெயிலின் உச்சக்கட்ட காலம் மே 4- ஆம் தேதி தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறைந்த பாடில்லை.
இதனால் ஈரோடு, வேலூர், திருத்தணி, திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ‘அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்க இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 25 நாட்களுக்கு நீட்டிக்கும் அக்னி வெயிலானது மே 28-ந் தேதியில் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்றும் இரவு நேரத்தில் அதிகமான புழுக்கம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மே 11 முதல் 24-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் பொதுமக்கள் இதுபோன்ற நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
