ஒரு ஆண்டுக்கு 12 வாரங்கள் வரை மருத்துவ விடுப்பு, சுற்றுலா விடுப்பு, ஊதியம் இல்லாத விடுப்பு, மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு என ட்விட்டர் நிறுவனத்தில் இருந்த நிலையில் தற்போது அது முழுமையாக நீக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் என ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவை வேலையை விட்டு நீக்கிய அவர் ஏராளமான தொழிலாளர்களையும் வேலைய விட்டு நீக்கினார். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த 70 சதவீத மொழிகள் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுடைய விடுமுறையிலும் எலான் மஸ்க் கைவைத்துள்ளது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு 12 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. பராமரிப்பு, ஆரோக்கியம், உற்பத்தி திறன், பயிற்சி மேம்பாடு உட்பட பல விடுமுறைகள் இருந்தது என்பதும் இந்த விடுமுறைகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே ஊழியர்களுக்கு வருடத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அலவன்ஸ்கள் காலப்போக்கில் மறு மதிப்பீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பலர் வெளியேற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போது பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் தங்களால் இன்னும் அதிக நாட்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது என்றும் கூறிவந்த நிலையில் தற்போது விடுமுறைகளில் எலான் மஸ்க் கை வைத்துள்ளதால் பல ஊழியர்கள் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.