6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலித்த முழக்கம்… செங்கோல் கொடுத்த சேகர்பாபு… சென்னை மேயர் பதவியேற்பின் சுவாரஸ்யங்கள்!
340 ஆண்டுகள் பழமையான சென்னை மாநகராட்சியின் மேயராக 28 வயதே ஆன இளம் பெண் ப்ரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 178 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,வடசென்னையைச் சேர்ந்த பிரியா ராஜன் மேயர் பதவிக்கும், துணை மேயராக அன்பழகனும் போட்டியிடுவதாக திமுக தலைமை நேற்று அறிவித்தது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மேயர், துணை மேயர் பதவிகளுக்கான பிரநிதிகளை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் ப்ரியா ராஜன் மட்டுமே மேயர் வேட்பாளராக போட்டியிட்டதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார். மேலும் இவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். முதன் முறையாக வடசென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள மேயர் மற்றும் மிக இளம் வயதில் சென்னை மேயராக பொறுப்பேற்றவர் என பல பெருமைகளை அடைந்துள்ளார்.
சென்னை மேயராக பிரியா ராஜன் பதவியேற்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் சென்னை மேயரும், தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றனர். பிரியா ராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அவருக்கு சென்னை மாநகராட்சி ஆணையருக்கான சிவப்பு நிற அங்கி மற்றும் தங்க செயினை வழங்கினார். அதனை அணிந்து மாநகராட்சி அரங்கிற்குள் நுழைந்த பிரியா ராஜன் கையில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் செங்கோல் கொடுத்து மாநகராட்சி மேயர் இருக்கையில் அமரவைத்தனர்.
கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மேயர் வருகிறார், மேயர் வருகிறார்’ என்ற முழக்கம் மாநகராட்சி அரங்கிற்குள் ஒலிக்க, முதல் பட்டியலின பெண் மேயராக பொறுப்பேற்றிருக்கார் பிரியா ராஜன்.
The chant of ‘Mayor varar, mayor varar’ in the council hall after six years. Corporation commissioner Gagandeep Singh Bedi along with former mayor Ma Su and Minister Shekar Babu hands Priya the sceptre. @xpresstn pic.twitter.com/gkWSkmYTJo
— Nirupama Viswanathan (@NirupamaViswa) March 4, 2022
