கடந்த 22 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எக்கோ கருவி பொருத்தப்பட்டு, இதயவியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கடந்த 22ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இருதய பிரச்சனைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் பூரண நலமடைந்ததை அடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக போரூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.