#BREAKING ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை… அவையை விட்டு அதிமுக வெளிநடப்பு!
தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாபு இருக்கும் என குற்றச்சாட்டி அதிமுகவினர் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மன்னம்பந்தல் என்ற இடத்தில் விசிக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் போது ஆளுநர் கார் மீது போராட்டக்காரர்கள் கறுப்புக்கொடியை வீசியதால் பரபரப்பு நிலவியது. மேலும் கற்கள் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆளுநர் பாதுகாப்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தவில்லை, சட்டம் ஒழுங்கை காக்க காவல்துறையினர் தவறிவிட்டதாக குற்றச்சாட்டிய அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
