எம்ஜிஆராக மாறிய அண்ணாமலை; கடும் கொந்தளிப்பில் அதிமுக!

அன்னூரில் நடைபெற்ற சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட போஸ்டரால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளன.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, நமது நிலம் நமதே என்ற பெயரில் குழு அமைத்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அன்னூர் – ஓதிமலை சாலையில் பாஜக சார்பில் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அன்னூர் வந்த அண்ணாமலையை வரவேற்கும் விதமாக சாலையின் இருபுறங்களிலும் பாஜக கொடியுடன் விதவிதமான போஸ்டர்கள் மற்றும் பேனர்களை வைத்திருந்தனர்.

அதில் ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வரும் எம்.ஜி.ஆர். போல் கையில் சாட்டையுடன் இருக்கும் அண்ணாமலையின் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து அதிமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே அதிமுகவில் நிலவி வரும் இபிஎஸ், ஓபிஎஸ் பிரச்சனையைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் கவனத்தை ஈர்க்க பாஜக முயற்சித்து வருவதாக அதிமுக தொண்டர்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.

மேலும் வார்த்தைக்கு, வார்த்தைக்கு எதிர்கட்சி போல் பாஜக செயல்படுவதாக சோசியல் மீடியாவில் அக்கட்சி தொண்டர்கள் வேறு சுய விளம்பரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் அடையாளமான எம்.ஜி.ஆரை வைத்து பாஜகவினர் செய்த செயல் அதிமுகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.