மண் வாசனை படத்தில் நடந்த அந்த ஒரு சம்பவம்.. ரேவதியின் முதல் பட அனுபவம்

தமிழ் எத்தனை ஹீரோயின்கள் வந்தாலும் இன்றும் ரேவதிக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. துறுதுறு நடிப்பு, கவர்ச்சிக்கு நோ சொல்லி நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள், இயல்பான சாந்த முகம் என பாரதிராஜா கண்டெடுத்த முத்துக்களில் R வரிசை ஹீரோயின்களில் ஆஷா என்ற ரேவதியும் ஒருவர். கேரள மாநிலம் கொச்சியில் பிறந்த ரேவதிக்கு மண் வாசனை படம் மூலம் அறிமுகப்படுத்தி அதன்பின் தமிழ்த் திரையுலகில் நிரந்த இடம் கொடுத்தார் பாரதிராஜா.

பாரதிராஜாவின் அக்மார்க் கிராமத்துப் படமான மண்வாசனை 1983- ல் வெளியாகி அப்போது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் தான் நடிகர் பாண்டியனும் அறிமுகமானார். இளையராஜாவின் கிராமிய இசையில் மண் வாசனை தமிழகம் முழுவதும் மணம் வீசியது. ஹீரோயினாக நடித்த ரேவதிக்கு இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத ஹீரோயினாக வலம் வந்தார். மேலும் சினிமா நுணுக்கங்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்து இயக்குநராகும் அளவிற்கு வளர்ந்து இரு படங்களையும் இயக்கினார்.

தனது ஆசான் இயக்கத்தில் மண் வாசனைக்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின்னர் தாஜ்மஹால் படத்தில் நடித்தார் ரேவதி. மண் வாசனை படத்தில் இவரை முதன்முதலாக கேமிரா முன் நிற்க வைக்கும் போது பாரதிராஜா ஒரு நடிப்புப் டியூசனே நடத்தியிருக்கிறார். பாண்டியனுக்கும், ரேவதிக்கும் காட்சி காட்சியாக நடித்துக் காட்டி அவர்களை நடிக்க வைத்திருக்கிறார். சாதாரணமாக சரியாக நடிக்கவில்லை என்றால் நடிகர்களைக் கை ஓங்கும் பாரதிராஜா இந்தப் படத்தில் ஹீரோ பாண்டியனையும் விட்டு வைக்கவில்லை.

காதல் கோட்டை படம் இப்படித்தான் உருவாச்சா? அஜீத் சினிமா வாழ்க்கைய மாற்றிய அந்த தருணம்

அவர் ஒரு காட்சியில் சரியாக நடிக்காததால் அவரை பாரதிராஜா அடித்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ரேவதி. மேலும் முதல் படத்திலேயே அவருடைய சொந்தக் குரலிலேயே நடித்துள்ளார். அப்போது அவருக்கு மலையாளம் மட்டுமே தெரிந்திருந்தது. இருப்பினும் பாரதிராஜா எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து கிட்டத்தட்ட 7 நாட்களாக டப்பிங் பேசி முடித்திருக்கிறார் ரேவதி. இந்தப் படத்தில் நடித்த போதுதான் முதன் முதலாக கிராமம் என்பது எப்படி இருக்கும் என்பதையே தெரிந்திருந்தாராம் ரேவதி.

கேரளாவில் அவர் பிறந்து வளர்ந்த பகுதியில் இதுபோன்றதொரு கிராமங்கள் இல்லாததால் முதன் முறையாக பாரதிராஜாதான் அவரை கிராமத்துப் பக்கம் அழைத்து வந்து ஹீரோயினாக்கி இருக்கிறார். இப்படி தனது முதல் பட அனுபவங்களைப் பற்றி அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ரேவதி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...