திரையில் இப்படி ஒரு ஜோடிப் பொருத்தமா? தமிழ் சினிமா ரசிகர்களை ஏங்க வைத்த சுரேஷ் – நதியா காம்பினேஷன்!

ஒரு நடிகையின் வெற்றி என்பது எந்த அளவிற்கு இருக்கும் என்றால் அவரைப் பாராட்டுவார்கள். அவர் படங்களைக் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த நடிகையின் வெற்றியோ தமிழ் சினிமாவே கண்டிராதது. அவர் உடுத்தும் உடை முதல் அணியும் கம்மல் வரை அந்தக் கால கட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்தது என்றால் அவர்  எந்த அளவிற்கு புகழ்பெற்றவராக  இருந்திருப்பார் என்று யோசித்துக் கொள்ளுங்கள். அந்த நடிகை வேறு யாருமல்ல.. நதியா தான்.

திரையில் நதியா வந்தாலே தங்களது கனவுக் கன்னியாகக் கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். குறிப்பாக பெண்களிடத்தில் நதியா மிகவும் பிடித்த நடிகையாக இருந்தார். இன்றும் வயதான தோற்றமே தெரியாமல் 80-களில் இருப்பது போலவே தனது உடலை பேணிக் காத்து வருகிறார்.

சினிமாவில் எத்தனையோ ஜோடிப் பொருத்தம் வந்தாலும் நதியாவுடன் நடித்த இந்த நடிகரின் காம்பினேஷன் 80-களில் வெகுவாக ரசிக்கப்பட்டது. அந்த நடிகர்தான் சுரேஷ். 1986 ஆம் ஆண்டு வெளியான, ’பூக்களைப் பறிக்காதீர்கள்’ படத்தின் மூலம் முதன் முறை ஜோடி சேர்ந்த சுரேஷ் – நதியா இணைக்கு, ரசிகர் பரப்பில் கிடைத்த மாபெரும் வரவேற்பு , தொடர்ந்து அவர்களை பல படங்களில் ஜோடியாக்கி, சூப்பர் ஹிட் ஜோடி என்கிற அடையாளத்தோடு வலம் வர வைத்தது.

ஹீரோவை விட அதிக சம்பளம் பெற்ற இசையமைப்பாளர்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?

படத்தின் போஸ்டரில் பார்க்கும் போதே, எப்படியாவது திரையில் இவர்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஈர்ப்பினைக் கொண்டு வரும் அளவிற்கு வசீகரமானது சுரேஷ் – நதியா இணை. மற்ற எந்த ஜோடிக்கும் இல்லாத நவ நாகரிக இளைஞர்- இளைஞி தோற்றம் இயல்பிலேயே அமைந்திருந்த இந்த ஜோடி, திரையில் பயன்படுத்தும் ஆடை, அணிகலன்கள் (accessories) அன்றைய கல்லூரி இளசுகளின் மத்தியில் பேசுபொருளாகி அதைப் பின்பற்றும் அளவிற்கு யூத் ஐகான்களாக வலம் வந்தது.

பூக்களைப் பறிக்காதீர்கள், மந்திரப் புன்னகை, உனக்காகவே வாழ்கிறேன், பூமழை பொழியிது போன்ற படங்களில் வந்த பாடல்களும், மேலும் ‘நதியா நதியா நைல் நதியா’ போன்ற மேற்கத்திய பாணி மெட்டுக்களில் இவர்களின் நடனமும் பெரிய வசீகரத்தைக் கொண்டிருந்தது. மேலும் இவர்கள் நடிப்பில் வெளியான ’பூவே இளம் பூவே’, ’மங்கை ஒரு கங்கை’, ‘என் வீடு என் கணவர்’, ‘இனிய உறவு பூத்தது’ என அனைத்துப் படங்களிலுமே இவர்களின் திரைப்பொருத்தம் என்பது புதிதாகப் பூத்த பூ போன்று இருந்தது.

சில படங்களில் சுரேஷ் இரண்டாம் நாயகனாக வருவார், இருப்பினும் நதியாவோடு இணைந்து ஒரு பாடல் காட்சியிலேனும் தோன்றுவது போல அந்தக் கதாபாத்திரம் அமைந்திருக்கும். நதியா ஏற்படுத்திய அலை என்பது இன்று வரை வேறு எந்த நடிகைக்கும் நிகழாத விஷயம். அப்படியான நேரத்தில் நதியாவின் கால்ஷீட் கிடைத்துவிட்டால், சுரேஷ் சற்று நேரம் வந்து போவது போலாவது ஒரு கதாபாத்திரத்தை தங்களது கதையில் உருவாக்கியிருப்பார்களோ என்றொரு யோசனைக்கும் இட்டுச் செல்லும் அளவிற்கு திரையில் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டிய ஜோடி இது எனலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...