பகவான் கிருஷ்ணர் என்றாலே ஞாபகத்திற்கு வரும் என்.டி.ராமாராவ்.. 101 வது ஆண்டு பிறந்த தினம்

விடுதலைப் போராட்ட வீரர்கள், அவதாரங்கள், மகான்கள், தலைவர்கள் என பலரை கடந்த காலத் தலைமுறையினரும், இந்தத் தலைமுறையினரும் நேரில் பார்த்திருக்க இயலாது. ஆனால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என சில ஆதாரங்களும், கல்வெட்டுக்களும், தொல்பொருள் ஆராய்ச்சி தகவல்களும் கூறுகின்றன. நாமும் அவர்களின் உருவம் இப்படித்தான் இருக்கும் என கற்பனையாகச் சித்தரித்து போற்றி வருகிறோம். ஆனால் அவர்கள் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் என அவர்களுக்கு உயிர் கொடுத்து தங்கள் நடிப்பில் அந்த தலைவர்களையும், மகான்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

அதற்கு தமிழ்சினிமாவில் மிகச்சிறந்த உதாரண நடிகர் சிவாஜி கணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன், திருநாவுக்கரசர், வ.உ.சிதம்பரனார், ராஜராஜ சோழன், கர்ணன் போன்ற பலருக்கு தனது நடிப்பின் மூலம் உயிர்கொடுத்து இப்படித்தான் இருப்பார் என உணர வைத்தார். ஆனால் புராணங்களில் கூறப்படும் கடவுள்களை ஒருபோதும் யாரும் நேரில் பார்த்திருக்க வாய்ப்பே கிடையாது. நாம் வணங்கும் உருவங்கள் அனைத்தும் கற்பனையால் வரையப்பட்டவையே.

அவ்வாறு கற்பனையால் வரையப்பட்ட ஓவியங்களுக்கு உயிர் கொடுத்து நடித்தவர் என்.டி.ராமாராவ். தமிழ்நாட்டில், தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எப்படியோ அதேபோல் ஆந்திராவில் என்.டி.ராமராவ் ராஜ்ஜியம் தான். திரையிலிருந்து அரசியலுக்கு வந்து ஆந்திராவையே ஆண்டவர். திரைப்படங்களில் இவர் கிருஷ்ணர் வேடம் ஏற்று நடிக்கும் போது அந்தக் கடவுள் கிருஷ்ணபகவானே நேரில் வந்து நம்முன் நிற்பது போல் தோன்றும் அளவிற்கு இவரது முக பாவனைகளும், தோற்றமும், அழகும் இருக்கும். அதுவும் கர்ணன் படத்தில் சிவாஜியின் நடிப்பிற்கு நிகராக என்.டி.ராமாராவ் கிருஷ்ண பகவானாக வந்து மக்கள் மத்தியில் கடவுளாகவே திகழ்ந்தார்.

ஆந்திராவில் கிருஷ்ணபகவானை வழிபடும் மக்கள் தங்கள் வீடுகளில் என்.டி.ராமாராவ் கிருஷ்ணர் வேடம் ஏற்று நடித்த புகைப்படங்களை வைத்தே வழிபடுகிறார்கள் என்றால் அந்த அளவிற்கு என்.டி.ராமாவின் புகழ் நிறைந்திருந்தது. தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் ஏராளமான புராணப் படங்களில் நடித்த என்.டி.ராமாராவ் மாயாபஜார் படத்தில் கிருஷ்ணராகவும், கர்ணன் படத்தில் கிருஷ்ணராகவும், சம்பூர்ண இராமாயணம் படத்தில் ராமராகவும் நடித்தார்.

புராணப் படங்களில் நடிப்பது மற்ற படங்களில் நடிப்பது போல் அல்ல. மிகச் சுலபம் என்கிறார் என்.டி.ராமராவ். மற்ற படங்களில் நடிக்கும் போது சண்டை, பாடல், ஆக்சன் என பலவாறு இருக்கும். ஆனால் புராணப்படங்களில் முகபாவனைகள் மட்டும் இருந்தாலே போதும் என்று கூறுகிறார்.இன்று அவருக்கு 101 வது பிறந்தநாள். நூற்றாண்டுகளைக் கடந்த கலைஞன் மறைந்தாலும் பகவான் கிருஷ்ணராக அனைவரின் உள்ளத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்.டி.ராமாராவ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...