‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டு ஹிட்டாக காரணமே ஜெயலலிதா தான்.. ஒதுங்கிய எம்ஜிஆரை ஓகே சொல்ல வைத்த சீக்ரெட்..

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வாழ்ந்து மறைந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். சினிமா மேல் கொண்ட காதலால், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த எம்ஜிஆர், ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான இடம் ஒன்றை முதலில் உருவாக்கினார். தொடர்ந்து பல்வேறு கஷ்டங்கள் வந்த போதும், அதனைக் கண்டு துவண்டு போகாமல் சினிமா பயணத்தை நோக்கி நடை போட்ட எம்ஜிஆர், பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மாறினார்.

அதிலும் அவர் நடித்த கதாபாத்திரங்கள், தமிழ் மக்களை அதிகம் ஈர்த்தது. மிகவும் கஷ்டப்படும் மக்களுக்காக போராடும் குணம் கொண்ட கதாபாத்திரங்களில் பெரும்பாலும் எம்ஜிஆர் நடித்ததால், தமிழ் மக்கள் தங்களின் வீட்டு பிள்ளை போல எம்ஜிஆரை அப்போது பார்த்தனர். சினிமாவில் நடிகனாக உயர்ந்த எம்ஜிஆர், அடுத்து அரசியலை நோக்கி நடை போட்டார். அறிஞர் அண்ணா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களுடன் பயணித்த எம்ஜிஆர், தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியதுடன் தான் கொண்டு வந்த நலத்திட்டங்கள், தமிழகத்தின் கடை கோடி மக்களுக்கும் சென்று சேரும் படி வழிவகுத்தார்.

மக்களோடு மக்களாக நின்ற எம்ஜிஆரை மக்கள் பலரும் தங்கள் மனதிலே பச்சை குத்திக் கொண்டனர். இன்றும் வயதான நபர்கள் பலரிடம் கேட்டால், எம்ஜிஆரை போல நல்லாட்சியை தமிழகத்தில் யாரும் கொடுத்து விட முடியாது என்று தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு நடிகர் மற்றும் முதலமைச்சர் எம்ஜிஆரின் தாக்கம் பெரிது.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சியை நடத்திய ஜெயலலிதா, பல முறை முதலமைச்சராகி மறைந்த சூழலில், எம்ஜிஆருக்கு இணையாக அவரும் சிறந்த ஆட்சியை வழங்கி இருந்தார். அதே போல, எம்ஜிஆருடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்துள்ளார். அப்போது, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் நடுவே நடந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி தற்போது காணலாம்.

எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் ‘குடியிருந்த கோவில்’. இந்த திரைப்படத்தில் வரும் ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ மிகப்பெரிய ஹிட் பாடலாகும். சமீபத்தில் இந்த பாடலின் ரீமிக்ஸ் கூட ராகவா லாரன்ஸ் படத்தில் இடம்பெற்றிருந்தது. மேலும் ஒரிஜினல் பாடலில், எம்ஜிஆர் மற்றும் எல். விஜயலட்சுமி ஆகியோர் நடனமாடி இருந்தனர். இந்த பாட்டின் படப்பிடிப்பிற்கு முன்பாக, நடனத்தில் தேர்ந்த எல். விஜயலட்சுமி அசத்தலாக ஆட அவருக்கு ஈடு கொடுத்து தன்னால் ஆட முடியுமா என்ற சந்தேகம் எம்ஜிஆருக்கு எழுந்தது.

இது பற்றி இயக்குனர் கே. சங்கரிடம் எம்ஜிஆர் சொல்ல, தன்னால் விஜயலட்சுமி க்கு ஈடுகொடுத்து ஆட முடியாது என கூறினார். இதனால், சங்கரும் வேறு திட்டம் போட, அப்போது அங்கே இருந்த ஜெயலலிதா, இந்த பாடல் பாணியில் நடனம் தமிழில் வந்ததில்லை என்றும், நிச்சயம் இந்த பாடல் மற்றும் நடனம் உங்களுக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்றும் எம்ஜிஆரிடம் கூற, கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொண்டால் சிறப்பாக ஆடலாம் என்றும் அறிவுறுத்தினார்.

ஜெயலலிதா அப்படி சொன்னதால் சம்மதம் சொன்ன எம்ஜிஆர், சிறப்பாக ஒத்திகை எடுத்து ஆடலுடன் பாடலை கேட்டு பாடலில் ஆட, இன்று வரை அதில் வரும் எம்ஜிஆரின் நடனம் புகழ் பெற்று விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜயலட்சுமிக்கு ஈடாகவும் எம்ஜிஆர் போட்டி போட்டு ஆடி இருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.