ஒரு தயிருக்கு ஆசைப்பட்டு வேலையை விட்ட ரயில் டிரைவர்…. ஒரு சுவாரஸ்ய சம்பவம்…..

ஒரு அரசுப்பணியில் இருக்கும் எந்த ஒரு ஊழியரும் அவரின் பணியை சொந்த உபயோகத்திற்கோ அல்லது பணி துஷ்பிரயோகமோ செய்ய கூடாது என்பது சட்டம். அதையும் மீறி அப்படி யாராவது செய்தால் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூரில் இருந்து தெற்கில் உள்ள கராச்சிக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கானா ரயில் நிலையம் அருகே எந்த அறிவிப்பும் இல்லாமல் ரயிலை நிறுத்திவிட்டு என்ஜின் டிரைவர் கூலாக தயிர் வாங்கச் சென்றுள்ளார்.

பின்னர் மிகவும் சாவகாசமாக நடந்து வந்து மீண்டும் ரயிலை எடுத்துள்ளார். இந்த சம்பவத்தை ரயிலில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதன் மூலம் இந்த வீடியோ பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் அசாம் கானுக்கும் சென்றடைந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ரயில் டிரைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கையால் டிரைவர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், இதுகுறித்து பேசிய அமைச்சர் அசாம் கான், “நாட்டின் சொத்துக்களை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்த எவரையும் அனுமதிக்க மாட்டோம். இனி வரும் காலங்களிலும் இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.

தயிர் பாக்கெட் வாங்குவதற்காக ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தி விட்டு சென்ற சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏதோ மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு செல்வது போல சர்வ சாதாரணமாக டிரைவர் சென்ற அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment