கைக்குழந்தைகளுக்கு பால் இலவசம் – 7 ஆண்டுகளாக சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தேநீர் கடை!

விராலிமலையில் கைக்குழந்தைகளுக்கு பால் இலவசம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள கடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை சோதனைச்சாவடி அருகே அபூர்வா பேக்கரி என்ற பெயரில் இயங்கி வரும் கடையில் கைக்குழந்தைக்கு பால் இலவசம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 7 வருடங்களாக இந்த கடையில் பால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தினந்தோறும் தினமும் நான்கிலிருந்து 5 லிட்டர் பால் மட்டுமே தேவைப்படுவதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

செக்போஸ்ட்டிற்கு அருகிலே கடை இருப்பதால் ஏராளமான மக்கள் இங்கும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்த குவிகின்றனர். வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தாலும், மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த திட்டத்தை கடையின் உரிமையாளர் செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா லாக்டவுன் சமயம் தவிர அனைத்து நாட்களிலும் இங்கு கைக்குழந்தைகளுக்கு பால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் பாஸ்கருக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமல்ல வாடிக்கையாளர்களும் அவரது சேவையை பாராட்டி வருகின்றனர்.

தற்போது கைக்குழந்தைகளுக்கு பால் மட்டும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த சேவையை மேலும் விரிவுப்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தேநீர் வழங்கவும் பேக்கரியின் உரிமையாளர் திட்டமிட்டு வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment