பொள்ளாச்சியில் காவல் ஆய்வாளர் தீ விபத்தில் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கலாம்? என தடயவியல் ஆய்வில் சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த சபரிநாத் கடந்த 9ம் தேதி அன்று பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் அவரது வீட்டில் குடியிருந்து வந்த சாந்தி(37) என்பவரும் தீ விபத்தில் உடல் கருகி உயிர் இழந்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று பிரேத பரிசோதனை முடிவுகள் வந்துள்ள நிலையில், இருவரும் தீ காயங்களால் உயிரிழந்ததாக முதற்கட்ட மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. இருப்பினும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சம்பவ இடத்தை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள் விபத்து நடந்த பகுதிகளில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இது தற்கொலை சம்பவமா அல்லது கொலை சம்பவமா என்பது குறித்த சந்தேகமும் எழுந்து உள்ளது. காவல் ஆய்வாளர் சபரிநாத்தின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரின் மருத்துவ செலவுக்காகவும் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் சபரிநாத் கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்கி இருந்தது, போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது.
எனவே கடன் தொல்லையால் இவர் தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் கேட்டபோது, வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கை, தீயணைப்பு துறை அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற உடன் இந்த விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக தெரியவரும். அதுவரையில் வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியாகவே கருதப்படும் என்றும், மேற்கண்ட அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற உடன் சம்பவம் தொடர்பாக முழு விவரம் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்