சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவமனையில் மின் இணைப்பு துண்டிப்பால் அரசு மருத்துவர்கள் அருகில் இருந்து மருத்துவமனைக்கு கர்ப்பிணி அவசரமாக எடுத்துச் சென்று சிகிச்சை.
கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனிக்கு கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவரது மனைவி வான்மதி (23). இத்தம்பதியினருக்கு முதல் பிரசவம் என்பதால், கடந்த திங்களன்று அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
அதில் இன்று வரை சுப பிரசவத்திற்கு எதிர்பார்த்து இருந்தனர். இருப்பினும் வான்மதியின் பணிக்குடம் உடைந்ததால், மருத்துவர்கள் சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்து, மருத்துவர் மதுமிதா, கண்ணன் தலைமையில் மருத்துவக் குழுவினர் வான்மதிக்கு சிகிச்சைக்கான ஊசி செலுத்தி அறுவை சிகிச்சையை தொடங்கினர்.
அப்பொழுது திடீரென மின்தடை ஏற்பட்டதால், மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரை ஆன் செய்ய முற்பட்டனர். அப்போது அதுவும் பழுதடைந்ததால், அறுவை சிகிச்சை அறைக்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை தாமதமானது இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதே சமயத்தில் வான்மதிக்கு ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு வலிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவர்கள், அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக வான்மதியை சேர்த்து, அங்கு தனியார் மனை மருத்துவர் ராதிகா தலைமையிலான மருத்துவ குழுவினரும், அன்னூர் அரசு மருத்துவ குழுவினரும் இணைந்து வான்மதிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இதில் வான்மதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதே சமயம் வான்மதிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, அன்னூரில் முதல் உதவி செய்யப்பட்டு குழந்தையும், தாயும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் வலிப்பால் பாதிக்கப்பட்ட வான்மதிக்கு கோவை அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.