வீட்டுக்குள் புகுந்து ஓனரையே அலறவிட்ட அட்டகாச குரங்கு; பரபரப்பு காட்சிகள்!

கோபி அருகே நம்பியூரில் கட்டிட பொறியாளர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து ஒரு மணி நேரமாக ரகளையில் ஈடுபட்ட குரங்கு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோபி அருகே உள்ள நம்பியூரை சேர்ந்தவர் வினோத் என்பவர் கட்டிட பொறியாளராக உள்ளார். இவர் தனது பெற்றோர், மனைவி பவித்ரா மற்றும் 2 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை இவரது வீட்டின் முன்பக்க அறைக்குள் குரங்கு ஒன்று புகுந்தது. முன்பக்க அறையின் கதவு தானாக பூட்டிக்கொள்ளும் என்பதால் குரங்கு அறைக்குள் புகுந்தவுடன் கதவு பூட்டிக்கொண்டது.

இதனால் குரங்கினால் அறையில் இருந்து வெளியேற முடியவில்லை. குரங்கின் சத்தம் கேட்டு வீட்டின் உள் அறைக்குள் இருந்த வினோத், வெளியே வந்து குரங்கை விரட்ட முயன்றுள்ளார்.

அப்போது வீடணை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்த குரங்கு ஆத்திரத்தில் அவரை கடிக்க முயன்றுள்ளது. இதனால் பயந்து போன வினோத் மற்றும் அவரது மனைவி, குழந்தை உட்பட அனைவரும் ஒரு அறைக்குள் புகுந்து கொண்டு குரங்கை விரட்ட முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த குரங்கு வீட்டில் இருந்த பொருட்களை வீசி எறிவதும், சமையலறைக்குள் புகுந்து அங்கு சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவுகளையும், பழ வகைகளையும் சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை தூக்கி எறிந்தது. மேலும் அங்கு இருந்த விலை உயர்ந்த டிவி மேல் அமர்ந்து கொண்டு பொருட்களை வீசியும், துணியை கிழித்தும் ரகளையில் ஈடுபட்டது.

குரங்கின் ரகளை குறித்து தகவல் அறிந்து ஏராளமானோர் வீட்டின் முன் திரண்டனர். அவர்களையும் கடிப்பது போல் குரங்கு மிரட்டியதால் அவர்களும் கதவை திறக்க பயந்தனர். இதுகுறித்து நம்பியூர் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் குரங்கை பிடிப்பதற்கான உபகரணம் இல்லாத நிலையில் இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே துணிச்சலுடன் சில இளைஞர்கள் கதவை திறக்கவும், வீட்டிற்குள் இருந்த குரங்கு கண. இமைக்கும் நேரத்தில் அங்கு இருந்து தப்பியோடியது.

சுமார் ஒரு மணி நேரம் குரங்கின் ரகளையால் அங்கு சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இதுகுறித்த இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.