ஒரு வருஷத்துக்கே 10 ஆயிரம்தான் செலவாம்.. 32 வருஷமா சாண எரிவாயுவில் சமைக்கும் குடும்பம்
90களில் பொதுவாக பெரும்பாலான வீடுகளில் நாம் விறகு அடுப்புகளில் சமையல் செய்வதையே பார்த்திருப்போம்.
அதன்பின்னர் விறகு அடுப்பினை நாம் இப்போது பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் வைக்கவே பயன்படுத்துகிறோம்.
தமிழக அரசால் இலவச கேஸ் அடுப்பு வழங்கப்பட அனைத்து வீடுகளில் கேஸ் அடுப்பு பயன்படுத்தும் புழக்கம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் 32 ஆண்டுகளாக சாண எரிவாயு அடுப்பில் சமைக்கும் குடும்பம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதாவது சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னாரம்பட்டி பரவக்காடு என்ற கிராமத்தில் வசிப்பவர் 52 வயது நிரம்பிய மகேஷ்.
இவர் 1990 ஆம் ஆண்டு சாண எரிவாயு அடுப்பினை வீட்டில் அமைக்கும் பொருட்டு அரசாங்கத்திடம் 28000 ரூபாய் கடனுதவி பெற்று, சமையல் எரிவாயு அடுப்பிற்கான கலனை உருவாக்கியுள்ளார்.
வாரத்திற்கு இரண்டு முறை என்ற அளவில் இரண்டு மாடுகளின் சாணத்தை எடுத்து கரைத்து எரிவாயு அடுப்புக் கலனில் நிரப்பி வைத்து மாதம் முழுவதிலும் சமைத்து வந்துள்ளனர்.
இந்த எரிவாயு சமையல் கலனைப் பராமரிக்க ஓராண்டுக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆவதாக மகேஷ் கூறியுள்ளார்.
