மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடங்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தினை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் தங்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, பரத் சக்கரவர்த்தி தலைமையில் இன்று அமர்வுக்கு வந்தது. அப்போது அரசுப் பள்ளிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி கனவை நிறைவு செய்வதற்கும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கு 7.5% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதாக கூறினார்.
இது போன்ற இட ஒதுக்கீடுகளை கொண்டு வருவதற்கு மாநில அரசுக்கு உரிமை இருப்பதாக தனது தரப்பில் வாதாடினார். அதே போன்று தனியார் பள்ளிகள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஒரே மாதிரியான கல்வி முறையில் இரு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறினார்.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.