சென்னையில் வேரோடு சாயந்த ஏராளமான மரங்கள்.. உடனுக்குடன் அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

மாண்டஸ் புயல் நேற்று இரவு கரையை கடந்த நிலையில் சென்னையில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும், அந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மீட்பு படையினர் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது என்பதும், பின்னர் அந்த புயல் வலுவிழந்து நேற்று இரவு கரையை கடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புயல் கரையை கடக்கும்போது சுமார் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் சென்னையில் சுமார் 65 மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புயல் கரையை கடந்த பின்னர் உடனடியாக மீட்பு படையினர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விடிய விடிய பணியாற்றி ஜேசிபி இயந்திரங்கள் மூலம் உடனுக்குடன் மரஙகளை அகற்றி வருவதாகவும் இதனால் தற்போது போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்து உள்ள நிலையில் சென்னை அடையாறு பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.