5 லட்சம் புத்தகங்களை நீக்கிய டிஜிட்டல் நூலகம்.. நீதிமன்ற தீர்ப்பால் பொதுமக்கள் பாதிப்பு..!

உலகின் மில்லியன்கணக்கான பயனாளர்களைக் கொண்ட டிஜிட்டல் நூலகம் 5 லட்சம் புத்தகங்களை தங்களது இணையதளத்திலிருந்து நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காப்புரிமை இல்லாத பழைய புத்தகங்களை டிஜிட்டலில் சேகரித்து இலவசமாக வாசகர்களுக்கு இணையத்தின் மூலம் வழங்கும் ஒரு புதிய முயற்சியை இன்டர்நெட் ஆர்ச்சிவ் என்ற இணையதளம் எடுத்தது. இந்த டிஜிட்டல் நூலகத்தில் 38 மில்லியன் புத்தகங்கள், 15 மில்லியன் ஆடியோ பதிவுகள் உள்பட ஏராளமான பொக்கிஷங்கள் இலவசமாக பயனாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் தான் இந்த இணையதளத்தை எதிர்த்து பதிப்பாளர்கள் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு காரணமாக இன்டர்நெட் ஆர்ச்சிவ் அமைப்பு ஐந்து லட்சம் புத்தகங்களை தனது இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த இணையதளத்தின் ஆதரவாளர்கள் புத்தகங்களை நீக்கியதால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிப்பகங்களுக்கு கடிதங்கள் எழுதி வருகின்றனர்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், உள்ளூரில் நூலகம் இல்லாதவர்கள், தங்களுக்கு தேவையான தகவல்களை இணையத்தின் மூலம் பெற்று வந்ததாகவும், தற்போது இந்த புத்தகங்கள் நீக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் பதிப்பாளர்கள் இது குறித்து விளக்கம் அளித்த போது ’டிஜிட்டல் நூலகம் என்பது ஏமாற்று வேலை என்றும், எழுத்தாளர் மற்றும் பதிப்பக உரிமை இல்லாமல் எப்படி ஒரு புத்தகத்தை இணையதளத்தில் வெளியிடலாம்? என்றும் கூறி வருகின்றனர்.

இது குறித்து கல்வியாளர்கள் கூறிய போது ’எந்த ஒரு அறிவு பொக்கிஷமும் ஒரே இடத்தில் தேங்கி விடக்கூடாது என்றும், பதிப்பாளர்களே ஒன்று சேர்ந்து ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் அவர்கள் தங்களது புத்தகங்களை வெளியிடலாம் என்றும் அப்போதுதான் அது அனைத்து தரப்பினருக்கும் எளிதில் போய் சென்றடையும்’ என்றும் கூறி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews