500 ரூபாய் கள்ள நோட்டுகளை அடித்து புழக்கத்தில் விட்ட ஐந்து நபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 2000 ரூபாய் அபராதம் விதித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை சாலையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தேனியில் இருந்து கோவை நோக்கி சென்ற காரை சோதனை செய்ததில் அதில் இரண்டு லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காரில் பயணம் செய்த சிவகங்கையைச் சேர்ந்த செல்வம் , திருப்பூரைச் சேர்ந்த கணேசன், கோவையைச் சேர்ந்த சாமிக்கண்ணு, செல்வம் மற்றும் தேனியைச் சேர்ந்த நவமணிகண்டன் ஆகிய ஐந்து நபர்களையும் பெரியகுளம் காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையானது பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் உள்ள உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று ஐந்து நபர்களும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு ஐந்து நபர்களுக்கும் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 2000 ரூபாய் அபராதம் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை வழங்கி நீதிபதி மாரியப்பன் தீர்ப்பு வழங்கினார்.