Entertainment
சேல்ஸ்மேனாக ஆரம்பித்து ரூ.412 கோடி சொத்து சேர்த்தவர்: வசந்தகுமார் குறித்த தகவல்கள்

காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி எம்.பியான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 70
மறைந்த வசந்தகுமார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் இருந்து வந்தார் என்பதும் கன்னியாகுமரி தொகுதி எம்பியாக இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வான அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
தமக்கு ரூ412 கோடி சொத்து இருப்பதாக அறிவித்து தேர்தலை எதிர்கொண்டவர் வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அண்ணன், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் என்பதும், தற்போதைய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா வசந்தகுமார் என்பதும் குறிப்பிடத்தக்கது
வசந்தகுமார் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமார், அமமுக பொதுச்செயலர் தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி தனது இரங்கலை தெரிவித்துள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்கு சேவை செய்தவர் வசந்தகுமார் என – காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் பிறந்த வசந்தகுமார் இளம் வயதில் வி.ஜி.பி நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றிய அதன்பின்னர் சிறிய மளிகை கடை ஒன்றை தொடங்கினார். அதன்பின்னர் படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனத்தை தொடங்கினார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா என மொத்தம் 64 கிளைகளை விரிபடுத்திய வசந்தகுமார் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மாநில துணைத் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்தார்.
