4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை… இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சென்னையில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியருக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை தனியாக இருந்தபோது, திரு.வி.க நகரைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவர், குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக குழந்தையின் அம்மா, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு ஆகாஷை போலீஸார் கைதுசெய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆகாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். அதனை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அபராதத் தொகை ரூ. 10000ஐ பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு வழங்கவும், ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
