தமிழகம்
லஞ்ச ஒழிப்புத்துறையினர்களிடம் சிக்கிய 3வது முன்னாள் அதிமுக அமைச்சர்!
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் பிடியில் மூன்றாவது அதிமுக முன்னாள் அமைச்சர் சிக்கியுள்ளார். அவர்தான் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கேசி வீரமணி என்பவர். இன்று அதிகாலை கேசி வீரமணிக்கு சொந்தமான ஜோலார்பேட்டை வீடு மற்றும் சென்னை வீடு உள்பட 28 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவரது சகோதரர், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கேசி வீரமணி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் சொத்து சேர்த்ததாக வந்திருக்கும் புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதை அடுத்து அதிமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
