‘30 சதவீத வரி கட்டினாலும்’… கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி!
கிரிப்டோகரன்சி எனப்படும் மெய் நிகர் நாணயங்களுக்கு கிடைக்கும் வருவார்க்கு ஒன்றிய அரசு 30% வரி விதித்துள்ள நிலையில் அதனை தடை செய்வது இந்தியாவிற்கு நல்லது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிப்டோகரன்சி வர்த்தகம் பல ஆண்டுகளாகவே குழப்பம் ஏற்படுத்தி வந்த நிலையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் பரிவர்த்தனை வருவாயில் 30% வருவாயாக செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையடுத்து ஒன்றிய அரசு கிரிப்டோகரன்சியை அங்கீகரித்து உள்ளதாகவே பலரும் கூறினர். மாநில அவையில் இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சியை ஒன்றிய அரசு அங்கீகரிக்கவும் இல்லை தடை செய்யவும் இல்லை வரி மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்திடம் பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ரவி சங்கர் கிரிப்டோகரன்சி என்பது மக்களை ஏமாற்றும் மோசடி திட்டம் என்று கூறியுள்ளார். கிரிப்டோகரன்சிகளை நாணயமாகவோ, சொத்தாகவோ வரையறை செய்ய முடியாது அவற்றிற்கு உள்ளார்ந்த மதிப்பு கிடையாது என தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றும் பேஃன்சி திட்டங்களான கிரிப்டோகரன்சியை தடை செய்வது இந்தியாவிற்கு நன்மை என ரவி சங்கர் கூறியிருக்கிறார். கிரிப்டோகரன்சிக்கு ஒன்றிய அரசு வரிவிதித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
