வெளிநாட்டில் உயிரிழந்த 2 தமிழர்களின் உடலை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வாழ் தமிழர் துறை தகவல் கொடுத்துள்ளது.
நம் தமிழகத்தை பொறுத்தவரையில் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளில் தங்கி வேலைப்பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் திருச்சியை சேர்ந்த சின்னமுத்து, திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர்.
குறிப்பாக சவுதியில் இரண்டு பேரும் ஒரே ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேரும் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அவரவர் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இருப்பினும் தற்போது வரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சின்னமுத்து மனைவி தனது கணவரின் உடலை மீட்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதியளித்தார்.
இதற்கிடையில் தொடர் விடுமுறையின் காரணமாக தமிழர்களின் உடலை இந்தியா கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், வெளிநாட்டில் உயிரிழந்த 2 தமிழர்களின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வாழ் தமிழர் துறை கூறியுள்ளார்.