18ம் படி கருப்பண்ணசாமி கோவில் அழகர்கோவில்

133bc7389649073820a988c669153cb2

மதுரை அழகர் கோவிலை கருப்பண்ணசாமிதான் காவல் காத்துக்கொண்டிருக்கும் மிக சக்தி வாய்ந்த தெய்வமாக இங்கு வீற்றிருப்பது 18ம்படி கருப்பண்ணசாமி கோவில்.

இப்பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கருப்பசாமி மேல் மிகுந்த பக்தி கொண்டு மிகவும் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர்.

அநியாயங்கள் செய்தால் கருப்பசாமி கேட்பார் என இந்த கருப்பசாமிக்கு பயமும் பக்தியும் அதிகம்.

வளமான  கேரள தேசத்தை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் , மதுரையில் உள்ள திருமாலிருஞ்சோலை என்னும் திவ்விய தேசமான அழகர்கோவில் வந்தான் பள்ளிகொண்ட ,அழகே உருவான கள்ளழக பெருமானை தரிசனம் செய்தான்.

அழகரின் அழகை கண்ட அந்த அரசன் அதை உருவேற்றி சக்தியேற்றி தம் தேசமான கேரளாவுக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டினான்.

நாடு திரும்பிய அரசன் ,மந்திர ,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 கேரள மந்திரவாதிகளை தேர்வு செய்து அழகரின் சக்தியை எடுத்து அழகரை கேரளா தூக்கி வரும்படி கூறினான்..

பதினெட்டு மந்திரவாதிகளும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள்.

பதினெட்டு மந்திரவாதிகளுக்கு காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளை குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள் அழகர்மலை நோக்கி புறப்பட்டனர்.

அனைவரும் அழகர் மலையை அடைந்தனர். அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம் ,அழகரின் அழகில் மயங்கி தன்னை மறந்து நின்றது .

அழகரின் அழகிய தங்க ஆபரணங்களை கண்ட 18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து ,ஆபரணங்களையும் அழகரையும் தூக்கி செல்லும் எண்ணம் கொண்டு கருவறை நோக்கி சென்றனர்.

இவர்களின் கெட்ட நோக்கத்தை புரிந்து கொண்ட அடியார் ஒருவர், ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல, மக்கள் அனைவரும் அங்கு திரண்டு வந்து, அந்த 18 பேரையும் கொன்று, களிமண்ணால் படிகள் செய்து, படிக்கு ஒருவராக பதினெட்டு படிகளிலும் பதினெட்டு பேரையும் புதைத்தனர் .

தன்னிடம் மயங்கி நின்ற காவல் தெய்வத்திற்கு கருணை புரிய இறைவன் கருணை கொண்டார். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு காட்சி தந்து, அருள் புரிந்து ,வரம் தந்து , “என்னையும் மலையையும் காவல் புரிந்து வருவாய் என அருள் புரிந்தார்”

காவல் தெய்வமான கருப்பசாமி இம்மலையில் தங்கி இருந்து அழகர் மலையை இன்று வரை காத்து வருவதாக நம்பிக்கை உள்ளது.

காடு வீடெல்லாம் முன்னோடியாய் காவல் புரிந்து மக்களை காப்பாய் என இறைவன் கட்டளையிட்டார் . 18 பேருடன் வந்த தெய்வமாதலால் ,பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தந்தார் .

ஒருநாள் கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி ,திருமால் பள்ளிகொண்ட திருவாயிலையும் மலையையும் காப்பேன் ,திருமாலின் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்ட அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு படைக்கப் படுகிறது .

ஒருசமயம் பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு விஜயம் செய்த ஆண்டாள் பதினெட்டு படிகளை கண்டு வியந்ததாக கர்ண பரம்பரை செய்தியாக கூறப்படும் கதை தெரிவிக்கிறது.

ஒவ்வொரு நாளும் அழகர்மலை கோவில் பூட்டபட்டதும் ,கதவின் சாவி பதினெட்டாம் படி கருப்பசாமியின் முன்பு வைத்துவிட்டு செல்வர். மறுநாள் காலை கோவில் திறக்கும் முன் ,பட்டர் கருப்பசாமியிடம் பெற்று கதவை திறக்கும் சம்பிரதாயம் இன்று வரை நடைபெற்று வருகிறது .

சித்திரை திருவிழாவிற்கு அழகர் ,மதுரைக்கு புறப்படும்போதும் ,மதுரையிலிருந்து கோவிலுக்கு திரும்பும்போதும் அழகர் அணிந்த நகைகள் எண்ணப்பட்டு ,அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பசாமி முன்பு படித்து காட்டப்படும் .

கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.

இன்று வரை இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது . கள்ளழகருக்கு காவல் புரியும் கருப்பணசாமியை மக்கள் தங்கள் குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர் .

இன்றும் பதினெட்டாம் படி கருப்பசாமி முன் பல வழக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.

அழகர் கோவிலில் காவல் தெய்வமாக நின்ற கருப்பசாமி ,பின்னாளில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு காவல் தெய்வமாக இருந்து வந்தார்.

செல்லும் வழி:

மதுரை சென்று அங்குள்ள அழகர் கோவிலுக்கு சென்றால் கள்ளழகர் சன்னதிக்கு முன்பே பிரமாண்டமான இந்த கோவிலை கண்டு தரிசிக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.