உலக நாடுகளில் ஏற்பட்ட பேரழிவுகளில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்ட சுனாமியும் ஒன்றாகும்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் மக்களனைவரும் உறங்கும் அதிகாலை நேரத்தில் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஆழிப்பேரலை தாக்கத் தொடங்கியது.
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியாக உறுமாறி யாரும் எதிர்பாராத வகையில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களை தாண்டி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது.
தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுனாமி அலை தாக்கியது. நாகையில் மட்டும் சுனாமி பேரலைக்கு ஆறாயிரம் பேர் இறந்தனர். தமிழ்நாட்டில் மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கடல் அலையில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் நிலை என்னவென்று இதுவரை எந்த தகவலும் இல்லை. சுனாமியால் இறந்து போனவர்களை மொத்தமாக அடக்கம் செய்தனர். இந்த காட்சிகள் தமிழ்நாட்டில் அதுவரை பார்த்திராத பெரும் சோகமாகும்.
லட்சக்கணக்கான மக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து ஒரே நாளில் வீதிக்கு வந்தனர். பல நூறு குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதையாயினர். சுனாமி பேரலை தாக்கி 17 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் இப்பொழுதும் நீடித்துக்கொண்டிருக்கிறது.
சுனாமி தாக்கிய 17-வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சுனாமிபேரலையில் சிக்கி பலியானவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தியர்கள் அதுவரை கேள்வியே படாத சுனாமி என்ற பெயர் கொண்ட அந்த இயற்கை பேரிடர் இன்றளவிலும் அதன் காயங்களைத் தாங்கி நிற்கிறது.