
தமிழகம்
மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை; முதல் நாளில் 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்!
தமிழக அரசின் உயர்கல்விக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு முதல் நாளில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் உதவி பெறும் வகையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சிறப்பு முகாம்கள் மூலம் மாணவிகள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக மாணவிகளில் ஆதார் எண், வங்கி கணக்கு எண், கல்வி சான்றிதழ் மூலம் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் தகுதியான மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் இத்திட்டத்திற்காக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
