
Tamil Nadu
130 அடி உயர செல்போன் டவர் மாயம்: ஈரோட்டில் பரபரப்பு!!
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் திட்டப்பொறியாளர் போசல் குமார் சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் சென்னை மற்றும் மும்பை இடங்களில் செயல்பட்டு வரும் தங்களின் நிறுவனம் இந்திய தொலைதொடர்பு துறையில் பதிவு பெற்று நாடு முழுவதும் செல்போன் டவர்களை அமைத்து அதனை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் ஏர்செல் டவர்களை எடுத்து மற்றொரு தொலைதொடர்பு நிறுவனம் பராமரித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த செம்டம்பர் 2017-ஆண்டு முதல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பாலக்காடு தோட்டத்தில் ரங்கசாமி என்பவரின் நிலத்தில் செல்போன் டவர் பராமரித்து வந்ததாக கூறினார்.
இதனிடையே கடந்த 12 ஆம் தேதி ஆய்விற்காக சென்ற போது செல்போன் டவர், 3 ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர் பேட்டரிகள், ஏ.சி-கள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக புகார் அளித்தார். இதன் மொத்த மதிப்பு 31 லட்சம் என்றும் இது குறித்து விசாரணை நடத்தியபோது சரிவர தகவல் கிடைக்கவில்லை என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 130 அடி உயர செல்போன் டவர் மாயமாகி இருப்பது ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
