ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் இருந்து மாற்றப்படாது : அனில் அகர்வால் திட்டவட்டம் !!
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு பல்வேறு சட்டம் மற்றும் அரசியல் தடைகளை எதிர்கொண்ட போதிலும் விரைவில் அதே இடத்தில் செயல்படும் என்று வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த அவர் ஸ்டெர்லைட் ஆலையை இடமாற்றம் செய்ய ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விருப்பம் தெரிவித்தாலும் அதில் தமக்கு விருப்பம் இல்லை என கூறினார்.
தூத்துக்குடியில் ஏராளமான உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருப்பதாக கூறிய அனில் அகர்வால் ஆலை இயங்காத போதும் இதுவரையில் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை என தெரிவித்தார். இந்தியா தாமிரத்தை உற்பத்தி செய்ய விரும்பாத சர்வதேச சுயநலவாதிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டுவதாக தெரிவித்தார்.
தங்களது ஆலையை திறப்பதற்கு பெருமளவு ஆதரவு தெரிவிப்பதாக அகர்வால் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்பதாக கூறிய அனில் அகர்வால் நேர்மையான ஒரு தீர்ப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாக 4397 பேரும் மறைமுகமாக 17 ஆயிரம் பேரும் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது.
