விவசாயிகள் கவனத்திற்கு… இந்த மரக்கன்றுகளை வளர்த்தால் முழு மானியம்!

வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது ₹5 லட்சம் காசோலையுடன், பாராட்டு பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

சிறந்த அங்கக விவசாயிக்கான ” நம்மாழ்வார் விருது”: 

அங்கக வேளாண்மையில்  நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் “நம்மாழ்வார்’ பெயரில் விருது வழங்கப்படும் என்றும், இவ்விருது ஐந்து இலட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வேளாண் காடுகள் வளர்ப்பு:

மரங்கள் மண்ணின் வரங்கள்; அவை பாதசாரிகளுக்கு நிழற்குடை; பறவைகளுக்குச் சரணாலயங்கள். நிழலின் சாசனம், காற்றின் வாகனம், பசுமையின் ஆசனம். மரங்கள் வளர்க்கும்போது, மண் குளிர்ந்து மழை பொழிகிறது. கரியமிலவாயு காற்றால் உறிஞ்சப்பட்டு, சுற்றுச்சூழல் சுத்திகரிக்கப்படுகிறது. மழை பொழியும்போது, மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

இப்படி பல்வேறு வகையில் பயன்படும் மரங்களின் எண்ணிக்கை பெருக்கும் விதமாக வேளாண் நிலங்களில் மரங்களை வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் நிரந்தர வருமானம் பெற வழிவகை செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரம் வளர்க்க மானியம்: 

தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்குக் கிடைக்கச்செய்யும் பொருட்டு, வேளாண் காடுகள் திட்டத்தில், அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கு, புதிய நாற்றங்கால்கள் அமைக்க நிதியுதவி அளிக்கப்படும் என்றும், உயர்மதிப்புமிக்க மரக்கன்றுகள் வளர்த்து விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்க ஏதுவாக, ஏற்கனவே உள்ள நாற்றங்கால்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டில், 75 இலட்சம் செம்மரம், சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இதர்கான மத்திய, மாநில அரசுகளின் நிதியில் இருந்து  15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.