சூர்யாவிற்கு முன்பே விஜய் படத்தை வெளியிட முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம்….!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல சினிமா வாழ்க்கையும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் திரையரங்குகள் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு பொங்கலுக்கு எந்தவொரு பெரிய பட்ஜெட் படமும் வெளியாகவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகி கல்லா கட்டும்.

ஆனால் இந்தாண்டு வசூல் பாதிக்கும் என்பதால் பெரிய பட்ஜெட் படங்கள் பின்வாங்கிய நிலையில் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியானது. மேலும் பல படங்களின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் தான் விஜய் மற்றும் சூர்யா படங்கள் சிக்கியுள்ளன.

கோலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது ஒரே சமயத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

முன்னதாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், எதற்கும் துணிந்தவன் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும் பீஸ்ட் படம் கண்டிப்பாக ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டும் என விஜய் தரப்பு மிகவும் பிடிவாதமாக கூறி விட்டதாம். அதனால் பீஸ்ட் வெளியாகி சில மாதங்கள் கழித்தே எதற்கும் துணிந்தவன் வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. விரைவில் இந்த படங்களின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment