கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை எவ்வளவு செலவு செய்தார் தெரியுமா? வெளியான விவரம்

கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் செலவு செய்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் கோவை தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எவ்வளவு செலவு செய்தார் என்பதை பார்ப்போம்.

லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவாக குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே செலவு செய்ய முடியும். வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கை சரிபார்க்க தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதிக்கும் செலவின பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது.

இதுதவிர செலவினங்களை கண்காணிக்க அமைக்கப்பட்டு உள்ள குழு வேட்பாளர்களை தொடர்ந்து கண்காணிப்பார்கள். அவர்களின் பிரசார கூட்டத்திற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, டீ உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்து அவர்கள் செலவு கணக்கு தயார் செய்வது வழக்கம் ஆகும்.

அந்த வகையில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் பொதுக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடு, குடிநீர், நாற்காலி வசதி, விளம்பர செலவு என அனைத்திற்கும் விலை நிர்ணயம் செய்துள்ளது, அதற்கான பட்டியலை அந்தந்த வேட்பாளர்களுக்கு வழங்கி இருந்தது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.95 லட்சம் செலவு செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட 37 வேட்பாளர்கள் செய்த செலவு கணக்குகள் சரிபார்ப்பு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்து முடிந்தது. கோவை தொகுதி செலவின பார்வையாளர்கள் கீது படோலியா, உம்மே பர்டினா அடில் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் அதிகாரிகள் வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்களை சரிபார்த்தார்கள்.

இதையடுத்து கோவை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டத,. . இதன்படி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ரூ.83 லட்சத்து 77 ஆயிரத்து 301 செலவு செய்து உள்ளார். தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ரூ.93 லட்சத்து 53 ஆயிரத்து 386 செலவு செய்திருக்கிறார்.

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ரூ.86 லட்சத்து 66 ஆயிரத்து 960 செலவு செய்திருக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ரூ.50 லட்சத்து 40 ஆயிரத்து 583 செலவு செய்து உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews