இறைவன் ட்ரைலர் ரிலீஸ்… அதே டைப்பில் வந்த இந்த படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

இயக்குநர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படத்தின் ட்ரெய்லர் ரத்தம் சொட்ட சொட்ட இதயத் துடிப்பை எகிற செய்கிறது. தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை,’ ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இறைவன் ட்ரெய்லர் எப்படி?

சிறுவயது பெண்களை தேடி கொல்லும் அரக்க குணம் கொண்ட வில்லன் பிரம்மா. விஷ்வரூபம் படத்தில் ஒற்றை கண்ணை வைத்து துப்பாக்கியால் மிரட்டிய ராகுல் போஸ் அதே கண்களுடன் சைக்கோ கொலைகாரனாக மாறியுள்ளார். இருட்டில் ரத்தம் சொட்ட பெண்களை கொலை செய்யும் அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கிறார். மறுபக்கம் ஹீரோவான ஜெயம் ரவி குற்றவாளிகளை தப்பிக்க விட்டு அவர்களுக்கு தண்டனை தரும் முரட்டு போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

சென்னை மாநகரில் நடுக்கத்தை ஏற்படுத்தும் கொலை சம்பவங்கள், பொதுமக்கள் பீதியில் தவிக்கின்றனர். பெண்களை தேடிச் சென்று கொலை செய்யும் சைக்கோ கில்லர் பிரம்மாவை பிடிக்கும் பணி ஜெயம் ரவிக்கு தரப்படுகிறது. இரு முழி பிதுங்க வைக்கும் நடிகர் நரேன் என ஒரு ட்ரெய்லருக்கு தேவையான அத்தனை சுவாரஸ்யங்கள் இறைவன் படத்தில் நிறைந்திருந்திருக்கிறது.

தியேட்டரில் இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. இறைவன் படத்தை பார்ப்பதற்கு முன் கண்டிப்பாக இந்த படங்களை பற்றி தெரிந்திருப்பது நல்லது. இதையெல்லாம் தெரிவதால் அறிவு வளர போகிறதா என்ற கேள்வி எழுந்தாலும், இப்படிப்பட்ட படங்களையா மிஸ் செய்துவிட்டோம் என்று பலரும் உச்சு கொட்ட வாய்ப்புகள் உண்டு.

அந்தநாள்

1954ல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்து S பாலச்சந்தர் அவர்கள் இயக்கி சிவாஜிகணேசன், பண்டரிபாய் முதலானோர் நடித்த படம் அந்த நாள். தமிழ் திரையுலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே குறிப்பிடலாம். அந்த காலகட்டத்தில் 10 பாடல்கள் இல்லாத படமே இல்லை. ஆனால், அந்தநாள் படத்தில் ஒரு பாடல்களே இல்லாமல் புதுமுயற்சியுடன் வந்து வெற்றியும் கண்டது.

இப்படத்தில் சிவாஜியின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். படத்தின் முதல் காட்சியிலேயே கதாநாயகன் சிவாஜி துப்பாக்கியால் சுடப்பட்டு இறப்பார். கொலையை யார் செய்தது என்பதை கண்டுபிடிப்பது தான் மீதி கதை. கதாநாயகனாக நடித்து கொண்டிருந்த சிவாஜி இப்படத்தில் நாட்டை காட்டி கொடுக்கும் தேச துரோகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவன் (SEVEN)

1995ம் ஆண்டு வெளிவந்து உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த படம் செவன். புதிதாக டிரான்ஸ்பர் செய்யப்படும் துப்பறியும் போலீஸ் அதிகாரி டேவிட் மில்ஸ் (பிராட் பிட்), அனுபவம் வாய்ந்த,விரைவில் ஓய்வு பெற உள்ள மூத்த அதிகாரி வில்லியம் சொமேர்செட் (மார்கன் ஃப்ரீமேன்)இருவரும் சேர்ந்து ஒரு தொடர் கொலைகாரனை கண்டுபிடிக்கும் வழக்கில் சேர்ந்து செயற்படுகிறார்கள்.

இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பெண்களை கொலை செய்யப்படும் விதம் ஒரு கொலைகாரனின் சாமர்த்தியம் என இதயத்தை படபடவைக்க படமாக இருக்கும். ‘கர்மா’ நீங்கள் செய்யும் பாவங்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார் என்பது போல் பெண்களின் வாய் கிழிக்கப்பட்டு அதில் எழுதப்படும் வாசகங்கள் என அனைத்தும் பார்ப்பவரை மிரள வைத்தது. செவன் படத்தில் இருப்பது போன்ற காட்சிகளை இயக்குநர் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்திலும் காணலாம்.

ஆறாது சினம்

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஆறாது சினம். ஒரே கல்லூரியில் படித்த 4 பெண்கள் கொலை செய்யப்படும் கொலைகாரனுக்கும் இறந்த பெண்களுக்கும் என்ன சம்பந்தம், எதனால் கொலை செய்யப்பட்டனர். ஏன் இந்த கொலைகள் என கதை சொல்லப்படும் விதம் மிக நேர்த்தியாக இருந்தது. போலீசாக வரும் அருள்நிதிக்கு ஒரு ப்ளாஸ்பேக் என ஒன்லைன் ஸ்டோரியாக தொடங்கி நல்ல படம் பார்த்த திருப்தியை தந்தது என்று கூட சொல்லலாம். த்ரில்லர் ஜானர்களில் பல படங்கள் வந்திருந்தாலும் இதுபோன்ற படங்கள் ஆழமான வேட்கையின் மூலம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews