அடேங்கப்பா..! மிரள வைக்கும் செட்டிங்ஸ்: ஜெயிலர், ஜவான் படமெல்லாம் இங்க தான் எடுத்தாங்களா?

தமிழ் சினிமாவில் ஏ.வி.எம். ஸ்டுடியோ, விஜயா ஸ்டுடியோ, பிரசாந்த் ஸ்டுடியோ என்று ஆரம்ப காலகட்டங்களில் சினிமா படங்கள் எடுப்பதற்கு படப்படிப்புத் தளங்கள் இருந்தன. தென்னிந்திய சினிமாக்களில் பெரும்பாலும் இந்த மூன்று ஸ்டுடியோக்களையே சுற்றி வந்தன. மேலும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியும் இதனுள் அடக்கம்.

மொத்த சினிமா உலகமும் இந்த ஸ்டுடியோக்களையே சுற்றித்தான் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தது. இதிலிருந்து மாறுபட்டு மெல்ல மெல்ல வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு நகர்ந்தது சினிமா. பாராதிராஜா போன்ற இயக்குநர்கள் கிராமத்துப் பக்கம் தங்கள் ரசனையை மாற்ற தொடர்ந்து வந்த ஹீரோக்களும் அதையே விரும்பினர். செட் போட்டு எடுப்பதைக் காட்டிலும் இயற்கையாகவே அமைந்த இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தியதால் படங்களும் தரமாக வந்தது.

அதன்பின்னர் ஹீரோக்களின் சம்பளம், தயாரிப்பு செலவு என காலத்திற்கு ஏற்றாற் போல பட்ஜெட் எகிற வெளிப்புற படப்பிடிப்பை இயக்குநர்கள் தவிர்க்க ஆரம்பித்தனர். ஏனெனில் ஸ்டுடியோக்களில் எடுக்கும்போது செலவு குறைவாகவும் வெளிப்புறங்களில் எடுக்கும் போது  ஏற்படும் செலவு, அனுமதி பெறுவது, நடிகர்களைப் பார்க்க கூட்டங்கள் கூடுவது போன்றவற்றால் இயக்குநர்களால் நிம்மதியாக ஷுட்டிங் நடத்த முடியவில்லை.

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசித்தை அலங்கரிக்கும் ‘மின்சார கனவு’ படத்தின் கார்!!

இதனால் மீண்டும் ஸ்டுடியோக்கள் பக்கம் இயக்குநர்கள் பக்கம் பார்வை திரும்பியது. ஆனால் ஸ்டுடியோக்கள் நிறைய மூடுவிழா கண்டதால் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட புதிதாக சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது ஆதித்யாராம் பிலிம் சிட்டி. வெளிநாடுகளுக்கு இணையாக அனைத்து சிறம்பசங்களுடன் இந்த ஸ்டுடியோ அமைக்கப்பட்டதால் இயக்குநர்கள் பலர் இங்கு திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தனர்.

அந்த வகையில் தற்போது வெளிவந்து இந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டிருக்கும் ஜெயிலர், ஜவான், லியோ போன்ற படங்கள் இங்கு படமாக்கப்பட்டவையே. மேலும் விக்ரம் நடித்த கோப்ரா, விஜய்யின் மாஸ்டர், மெர்சல், புலி சூர்யா நடித்த 24, கார்த்தி நடித்த காஷ்மோரா, உலக நாயகனின் தசாவதாரம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் யாவும் இங்கு படமாக்கப்பட்டவையே.

இங்கு எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிட் வரிசையில் சேர்வதால் படப்பிடிப்புக்கு ராசியான இடம் என்ற பெயரையும் ஆதித்யாராம் பிலிம்சிட்டி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews